Tuesday, February 25, 2014

ஆசிவகம் 4

ஆசிவக மாயை
 
கடந்த மாதம் மாநிலக் கல்லூரியில் மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில், மணிமேகலை காலத்துச் சமணம் என்ற தலைப்பில் பேசினேன். அங்கு மணிமேகலை எடுத்துரைக்கும் ஆசிவகம் என்ற தலைப்பில் பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசிவகக் கருத்துக்களை தொகுத்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக எழுந்ததுதான் இக்கட்டுரை.





 
 
 (என் மற்ற ஆசிவக கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையைப் படிக்கலாம். ஆசிவகம் 3 - http://banukumar_r.blogspot.in/2006/11/3.html )
 
வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூல், வெகுநாட்களாக கிடைக்காமல், இந்த பொத்தகக் கண்காட்சியில் (இராம்கி ஐயாவின் குறிப்பு) முதலாம் பதிப்பை வாங்கினேன். வாங்கியகையோடு படிக்க ஆரம்பித்த நூலும் இந்நூல்தான்.

முதலில் ஒன்று, வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலின் பெயருக்கும் திருக்குறளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

ஆசிவகம் என்னும் மாயை

வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலின் ஆசிரியர் திரு.குணா. அவர் என்றில்லை, ஆசிவகத்தை ஆதரித்துப் பேசுவோரும், எழுதுவோரும் நினைவில் நிறுத்தத் தவறியக் குறிப்புகளை அல்லது கருத்துக்களை வாசகர்ப் பார்வைக்கு வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஆசிவகம் பற்றி ஆராயும் பலரும் கவனிக்கத் தவறியதை, இவரும் கவனிக்காமல் விட்டுவிட்டார். சில அடிப்படைப் புரிதல்கள் இல்லாமல் இவர் கட்டும் கட்டிடங்கள், சீட்டுக்கட்டு கட்டிடங்களாகத்தான் திகழ முடியும். அவை கவைக்கு உதவாது.
இது வள்ளவத்தின் வீழ்ச்சி என்ற தனி நூல் பற்றிய விமர்சனம் என்ற நிலையில் என் கருத்தை பதிய விழையவில்லை. ஒட்டுமொத்த ஆசிவக ஆதரவாளர் யாராகயிருந்தாலும் அவர்கள் அனைவரிடமும் வினவும் கேள்விகளாக இவற்றை பார்க்கவேண்டுகிறேன்.
கேள்விகள்

1. ஆசிவகம் என்ற சொல்லுக்கு நேரிதன் பொருள் என்ன?  - ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தங்கள் மனத்திற்கேற்பப் பொருள் கொள்கிறார்கள். ஆசிவகம் என்பதற்கு ஆசு+ஈவு+அகம் என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள்.
 
 
2. சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் ஆசிவகம் என்ற சொல்லாட்சி, எங்காவது பயலப்பட்டு வந்ததா? வந்தால் அதற்கான தரவுகள் என்ன?

3. ஆசிவகத்தின் மூல நூல் என்ன? அவற்றைப் பற்றியக் குறிப்புகள் அல்லது உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட பாடல்கள்/செய்யுள்கள் உள்ளனவா?


4. சமணம் என்ற பாகத/சங்கத சொல் தமிழில் அமணம் ஆகும். அமணம் என்பது தமிழ்நாட்டில் ஆசிவகத்தைக் குறிக்கும் என்று கருதுபவர்கள், அமணம் என்ற “தமிழ்” வார்த்தை பாகத/சங்கத மொழிக்கு செல்லும்போது “சமணம் என்று புணருமா? அப்படிப் புணர்ந்தால் அதற்கு சங்கத (பாணினியார்) இலக்கணப்படி பொருத்திக் காட்ட முடியுமா?

5. ஆசிவகத்தின் மூல நூல் தமிழில் இல்லை! அழிந்துவிட்டது என்றால் மற்ற மொழிகளில் வழங்கிவரும் ஆசிவக நூற்பட்டியல் என்னென்ன?

6. ஆசிவகம் என்ற சொல்லாட்சி தமிழகக் கல்வெட்டுக்களில் ஆளப்பட்டுள்ளதா?

7. குணா அவர்களின் கருதுகோள்படி, ஆசிவகம் என்ற பெயர் ஆசிவக எதிர்ப்பாளர்களால் கொடுக்கப்பட்ட சொல். அப்படியென்றால், ஆசிவகத்தின் உண்மை அல்லது இயற்பெயர் என்ன?

8. குணா அவர்கள் மணிமேகலையிலும், நீலகேசியிலும், சிவஞானசித்தியிலும் கூறப்படும் ஆசிவகக் கருத்துக்கள் பொருந்தாதவை என்கிறார்? பொருந்தாது என்று எடுத்துக்கொண்டால் ஆசிவகம் என்னும் இருப்பை ஏற்றுக் கொள்ள உதவும் நூற்கள் என்ன?

9. ஆசிவகக் கொள்கையின் நிறுவனர் யார்? மற்கலி கோசரா? அல்லது அவருக்கு முன்னமே யாரும் இருந்தனரா?
10. தென்னகத்தில் தமிழகத்தைத் தவிர்த்து, ஆந்திர, கன்னட தேசத்தில் ஆசிவகக் கருத்துக்கள் உள்ளனவா? நூல்கள் இருந்தனவா?
மேலே கேட்கப்பட்ட கேள்விகள் உண்மையில் சிந்திக்கவும் அல்லது அறியப்படவும் கேட்கப்பட்ட கேள்விகள்.  ஆசிவகம் பற்றி ஆராய்வோர் நிச்சயம் தெரிந்துக் கொள்ள, சிந்திக்க வேண்டியக் கேள்விகள் தான் இது.


இரா.பானுகுமார்,
சென்னை

Sunday, August 25, 2013

படித்தேன் பகிர்கிறேன் -3


படித்தேன் பகிர்கிறேன் -3

நூலின் பெயர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பதிப்பாளர் - பாரி நிலையம்
விலை - ரூ. 50/-

பக்கம் - 126-128

முடிவு

எத்துறையும்

எனவே, சமணர்கள் எல்லாத் துறைகளிலும் தமிழை வளர்த்துத் தமிழை வாழச் செய்து தமிழ் ஆழத்தைத் தம்மைப் போல் பிறரும் அறியப் பெரிதும் உதவ முயன்றனர். அம் முயற்சியில் வெற்றி கண்டனர். இதில் யாரும் ஐயங்கொள்வதற்கில்லை. சிறந்த இலக்கண நூல்களில் பெரும்பான்மையானவை சமணர்கள் எழுதினவையேயாம். தொல்காப்பியம் சமண நூல் என உறுதி கூறமுடியாமற் போனாலும், சமணம் பரவிய காலத்தெழுந்த தமிழ் வழக்கிற்கே இலக்கணம் கூறுகிறதெனலாம். இறையனாரகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், பிரயோகவிவேகம் நீங்கிய மற்றைய இலக்கணப் பரப்பெல்லாம் சமணர் இட்ட பிச்சையே எனலாம். இவையும் சமண இலக்கணங்களின் துணைகொண்டு விளங்குவனவேயாம். பாட்டுக்களை எல்லாரும் ஒப்புக் கொள்ளும் வகையில் சீர் பிரிப்பதற்குப் பெருவழி ஒன்றை காட்டியவர் யாப்பருங்கலக்காரரே ஆவர். எழுத்து, சொல் ஆராய்ச்சியைச் சிறுவரும் கொண்டு விளையாடும் படியாகச் செய்தவர் நன்னூல் எழுதிய பவணந்தி ஆவர்.

நிகண்டிற்குக் கடைகாலிட்டுக் கோட்டை கட்டியவரெல்லாம் சமணர்களே ஆவர். மேனாட்டார் அகராதி தொடங்குமுன் சமணர் முயற்சியே சிறந்து விளங்கியது. இலக்கியத்தில் பழைய காப்பியங்கள், மணிமேகலை, குண்டலகேசி நீங்கலாக, வழங்கியவையெல்லாம் சமணக் காப்பியங்களே யாம். காப்பிய வழியினைக் கம்பர் முதலோர்க்குச் செவ்வனே அமைத்துத் தந்தவர்களும் அவர்களேயாம். வசனத்திலும் பழைய இலக்கியமாக நின்று நிலவுவது சமணரது ஸ்ரீபுராணம் ஒன்றேயாம். அறவழி நூல்களைச் செய்தவர்கள் பெரும் பான்மையிலும் சமணர். பிறர் எழுதிய அறநூல்களும் சமணர்களிட்ட அறநூல் திட்டத்தைப் பின்பற்றுவனவேயாம். திருவள்ளுவர் சமணர் அல்லர் என்று கொள்வோரும் சமண அடிப்படையாம் அருளறத்தின் மேலேதான் திருவள்ளுவர் எக்காலத்துக்கும் எந்நாட்டினர்க்கும் தக்கதானதொரு அறக்கோயிலை எழுப்பியுள்ளார் என்று ஒப்புக் கொள்ளுதல் வேண்டும். ஆதலின், எந்தத் துறையை நோக்கினாலும் சமணர் செய்த பேருதவியைத் தமிழர் எந்த நாளும் மறுப்பதற்கில்லை. இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டைய தமிழர்கள் நன்குணர்ந்து போற்றிவருகிறார்கள்.



-
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

Wednesday, June 19, 2013

ஆழ்வார் - ஆள்வார்



ஆழ்வார் - ஆள்வார்


சமண தமிழ் இலக்கியங்களில் பயின்றுவரும் சமண சொற்றொடர்களை (பரிபாஷைகளை) ஆராய்வதென்பது எனக்கு என்றுமே ஆர்வத்தைத் தூண்டும் செயலாகும். அருகன் என்ற சொல்லாகட்டும், பட்டாரகன் என்ற சொல்லாகட்டும் பிண்டியர் என்ற சொல்லாகட்டும், அச்சொற்களின் மூலத்தையாராய்ந்து அதன் முழு முதற் பொருளையும் பருகுவதென்பது தேனில் ஊறிய பலா தான்!

அருகன், பட்டாரகன் போன்ற சொற்களின் ஆழத்தைப் பிறகு பார்க்கலாம். அதற்கும் முன்னே “சமண பரிபாஷைகளில்” மிக முக்கியமான ஒரு சொல்லை முதலில் ஆராய்வோம்.

ஆழ்வார்

சமண இறைவர்களை (இறைவன் என்பது முனிவர்களைக் குறிக்கப் பயன்படும் சமண பரிபாஷை) அருகன் என்ற திருபெயரைக் கொண்டு அழைக்கப்படுவர் என்பது, குறைந்தபட்ச தமிழ் ஞானம் உள்ளவர்களும் அறிந்ததே. ஆயின், சமண இறைவர்களை “நாயனார்” என்றும் “ஆழ்வார்” என்றும், கடவுள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ”கடவுள்”  என்பதற்கு முற்றும் துறந்த முனிவர் என்றே பொருள். சமண இலக்கியங்களுக்கு உரையெழுதும் போது இவற்றின் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. சீவகசிந்தாமணிக்கு முதன்முதல் ஒரு உரையை நச்சினார்க்கினியர் என்ற சைவப் பெருந்தகை உரையெழுதி அதை சமண சமய புலவர்களிடம் ஒப்புதலுக்காக காட்டினார். ஆனால், அவர் உரை சமண சமயபரமாக இல்லை என்று ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பின்னர், சமண சமய ஆசிரியர்களிடம், பயிற்சிப் பெற்று மறுமுறை உரையெழுதி சமணர்களின் அனுமதிப் பெற்று வெளியிட்டார் என்ற ஒரு கருதுகோளும் உண்டு. 
இதனால், இன்றைய வலைஞர்களுக்கு யான் எழுதுவது புதுச் செய்தியாகவும் தோன்றலாம் அல்லது ஏதோ கதைவிடுவதாகவும் தோன்றலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தேவர் வாக்கிற்கிணங்க ஆழ்வார் என்ற திருபெயர் எவ்வாறு அருகனுக்கு வழங்கி வந்தது என்பதை இக்கட்டுரையில் விளக்க முயலுகிறேன். சிலருக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு பாதையில் சென்று செம்பொருள் காணுதல் வேண்டும். அவ்வகையில் இக்கட்டுரை ஒரு ஆய்வுத் திறக்கு அமைய வழிகோலும் என்பது என் எண்ணம். 

ஆள்வாரா அல்லது ஆழ்வாரா?

ஆள்வார் மற்றும் ஆழ்வார் என்ற சொற்களுக்கு வேர்ச் சொல் வேறு, வேறு மூலத்தைக் கொண்டதாகும். ஆள்வார் என்பதற்கு ஆள் என்பது வேர்ச் சொல். அதுபோல் ஆழ்வார் என்பதற்கு ஆழ் என்பது வேர்ச் சொல். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆள்வார் என்பதே ஆழ்வார் என்றுத் திரிந்தது என்று நினைத்திருந்தேன். நினைத்து அவ்வாறே சில மின்குழுமங்களில் எழுதியும் இருக்கிறேன். அதற்கு யான் ஆதரமாகக் கருதியது, ஒரு எளிய சொல். அச்சொல் எவ்வாறு என்னை திசைத்திருப்பியது என்றால்?

பழம் என்பதை ப+ழ+ம் என்று பலுக்கவேண்டும். ஆனால், நம்மில் பலரும் பேச்சு வழக்கில் பளம் அல்லது பலம் என்று உச்சரிக்கிறோம். இங்கு “ழ” கரம் “ள” கரமாகத் திரியும். ஆழ் என்பது ஆள் என்றுத் திரிந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இவ்வாறான குழப்பத்திற்கு யான் மட்டும் ஆளாகவில்லை; நிறைய அறிஞர் பெருமக்களும் ஆளாகியிருக்கிறார்கள்.

குறிப்பாக திரு.எஸ். பழனியப்பன் அவர்களின் இந்த கட்டுரையைப் படிக்கவும்.

âlvàr or Nàyanàr: The Role of Sound Variation, Hypercorrection and Folk Etymology in Interpreting the Nature of Vaiùõava Saint-Poets
                                                                                                                        S. Palaniappan

இவரின் கருத்தை இன்றைய வைணவர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!

ஆழ்+பொருள் என்ன?

ஆழ் என்பதற்கு Sink; plunge; dive; immerse என்று கழக அகராதி பொருளுரைக்கிறது.

ஆழ்ந்தாராய்தல் think deeply; Cogitate என்றும் பொருளுரைக்கும் கழக அகராதி, “ஆழ்வார்” என்பதற்கு Saint; Lord என்று மிக சரியாகப் பொருளுரைக்கிறது. 

தவிரவும், நடைமுறையில் பேசப்படும் சொல்லாட்சிகளான, “என்ன ஆழ்ந்த யோசனையா?”, “ என்ன ரொம்ப ஆழமா மூழ்கிட்ட போல” என்பதைக் கவனிக்கும் போது ஆழ் என்ற வேரின் பொருள் புரிகிறது.

ஆள்+பொருள் என்ன?

ஆள் என்பதற்கு Man; warrior; devotee; servant; person என்றும் ஆள்தல் என்பதற்கு rule; use; maintain என்றும் மிக சரியாகவே கழக அகராதிப் பொருளுரைக்கிறது.

”நீ பெரிய ஆளுப்பா” என்றும் “அவரு ஆளப் பிறந்தவரு” என்றும் பேச்சு வழக்கினில் வரும் சொல்லாட்சிகளைக் கவனிக்கவும்.

அருகன் ஆழ்வாரா?

ஆழ்வார் என்ற பெயர் அருகனுக்குப் பொருந்துமா? என்றால்.. பொருந்தும்! எப்படியெனில், அருகர் சிலைகள் ஆழ்ந்த தியானக் கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தியானத்தில் ஆழ்ந்திருப்பதால் “ஆர்” விகுதி சேர்த்து “ஆழ்வார்” என்று அழைக்கப்பட்டார். இவர் கோலத்தைப் பார்த்து,  ”தன்னில் ஆழ்ந்துக் கொண்டிருப்பவரை”க் குறிக்க ஆழ்வார் என்ற பிரயோகம் பிறரால் குறிக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தை பொருத்தவரை கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் அருகர் சிலைகள் மலைகளில் வடிக்கப்பட்டன என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, தொல்லியல் அறிஞர் திரு. ஏகாம்பரநாதன் அவர்கள் குறித்திருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இருந்து, (கழுகுமலை, திருமலை) முதன் முதல் அருகரைக் குறிக்க ஆழ்வார் பயன்படுத்தப் பட்டிருப்பதுத் தெற்றெனத் தெரியும். 




 (படம் - கழுகுமலை. நன்றி - http://saravana-saraphoto.blogspot.in/2013/06/38.html )

அருகன் உருவங்களையும், சிலைகளையும் “தன்னில் ஆழ்வதாக” காட்டப்படவேண்டும் என்பது சிற்ப சாஸ்திரம். அவ்வாறே, தமிழகத்தில் காணும் அருகர்கள் சிலைகளும், உருவங்களும் காணப்படுவதும் இதை உறுதி செய்யும்.

கல்வெட்டுச் சான்றுகள்

·          1. திருநறுங்கொண்டைத் திருத்தல வரலாறுஎன்ற நூலில், புலவர் மணி. மு.சண்முகம்பிள்ளைதிருநறுங்கொண்டை அப்பாண்டைநாதரின் திருக்கோயிலை மேலிற்பள்ளி (மேல்நிலைப்பள்ளி) என்றும், சந்திரநாதர் திருக்கோயிலைக் கீழைப்பாளிஎன்றும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு பள்ளிகளும் தனித் தனியாக மனனர் முதலியோர் நிபந்தம் வைத்த செய்திகளும் இரண்டிற்கும் சேர்ந்து நிபந்தம் விட்ட செய்திகளும் சாசனங்களில் காணப்படுகின்றன. ஸ்ரீசந்திரநாதர்பாழியிலாழ்வார்என்றும் அப்பாண்டைநாதர் பள்ளியிலாழ்வார்என்றும் சாசனங்களில் குறிக்கப்படுகிறார்கள்.
·         a. திருநறுங்கொண்டைக்கீழைப்பள்ளியாழ்வார்..... (S.I.I., Vol,VII, 1016)
·         b. திருநறுங்கொண்டைத் தேவர் அப்பர்க்கும் பாழியிலாழ்வார்க்கும் திருவமுர்துபடிக்கு - (317 of 1939-40)
·         2. ஸ்ரீஅரைமலை ஆழ்வார்க்கு நித்தம் அபிஷேகத்துக்கு (S.II Vol.5.No.361)
·         3. ஸ்ரீதிருநெற்சுறத்து அரைமலை ஆழ்வார்க்கு திருப்பணி செய்கிற பட்டன் சுந்தரனான (S.II.Vol.5.No.357)
·         4. சித்தாமூர்க் கல்வெட்டு “சிற்றாமூர் திருவூராம் பள்ளியாழ்வார்” என்றும்..
·         வீடூர் கல்வெட்டு “பெரும்பள்ளி ஆழ்வார்” என்றும்..

 தமிழ்ச் சமண இலக்கியங்களிலும் அருகனுக்கு ஆழ்வார் என்ற திருநாமம் பயிலப்பட்டு வந்திருக்கிறது. திருநறுங்கொண்டை மாலை பதிகம், பத்தும் பதிகம் என்ற தொகுப்பு நூல், அப்பாண்டைநாதர் உலா போன்ற இலக்கியங்களிலும் ஆழ்வார் என்ற சொல்லாட்சிப் பயின்று வருகிறது.

முடிபாக, ஆழ்வார், ஆள்வார் என்பது வேறு, வேறு வேர்களைக் கொண்ட சொற்கள் என்பதும் Mr.Friedhelm Hardy அவர்களின் கூற்றுப்படி ஆழ்வார் என்பது சமண இறைவர்களை முதலில் குறித்துp பயன்படுத்தப்பட்டது. சமணர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டுகளுக்கு பிறகு வேறு சமயங்களுக்கு மாறிய வரலாற்றை அறிஞர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதில் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களும் ஒருவர். சமண சமயத்தவர்கள் அருகிய காலத்தில் மலைக்குன்றுகளில் இருந்த குகைவாசலகள் பின்னாளில் பிற சமயக் கோயில்களாக மாறியவுடன், ஆழ்வார் என்ற பெயர் பிறரும் பயன்படுத்தத் தலைப்பட்டனர். 

மேலும், இலக்கியத் தரவுகளைவிட கல்வெட்டுத் தரவுகள் முதன்மைச் சான்றுகளாகக் கருதப்படுவதாலும், ஆழ்வார் என்ற பதம் அருகர்களுக்குப் பயன்பட்டு, பின் மற்ற சமயத்தார்களும் பயன்படுத்தப் போந்தார்கள் என்பதும் ஈண்டு பெறப்படும்.


இரா.பானுகுமார்,
சென்னை

Wednesday, May 01, 2013


படித்தேன் பகிர்கிறேன் -2




பொத்தகப் பெயர் - பொய்யும் வழுவும்

ஆசிரியர் - பொ.வேல்சாமி

பதிப்பகம் - காலச்சுவடு பதிப்பகம்

ISBN: 978-93-80240-25-1


இது படித்தேன் பகிர்கிறேன் என்ற தொடரின் இரண்டாவது பாகம். பொ.வேல்சாமி, இணையத்தின் மூலம் அறிமுகமான எழுத்தாளர். காலச்சுவடு பதிப்பகத்தின் இணையத்தளத்தில் இவருடையக் கட்டுரைகளை
படிக்கலாம். இணைய அறிமுகத்திற்கு முன்னமே எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் எழுத்தின் மூலம் இவரைப் பற்றியறிய முடிந்தது. இந்த ஆண்டின் பொத்தகக் கண்காட்சியில் இவருடைய புத்தகங்களை தேடி வாங்கினேன்.

அவற்றில் இந்த பொய்யும் வழுவும், பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற பொத்தகங்கள் என்னை வெகுவும் கவர்ந்தன. ஆசிரியர் நிறைந்த படிப்பாளியாகத் திகழ்வது மட்டுமின்றி, படித்த கருத்துக்களை உள்வாங்கி,
அதை தனக்கே உரித்தான முறையிலும், அந்த கருத்துக்களைப் பார்க்கும், எதிர் கொள்ளும் முறையிலும் அவர் தனித்து நிற்கிறார். உண்மையை மிக அனாவசியமாக கூறிச் செல்லும் பாங்கு பரமிக்க வைக்கிறது.

பொ.வேல்சாமி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்துக் கூறுவதுதான் “பொய்யும் வழுவும்” என்ற நூல்.

கட்டுரை எண்.4 - சமண சமயமும் வடமொழியும் - பக்கம்.51 - 60


பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழ்மொழி பற்றிய தன்னுடைய ஆய்வுகளை நிலைப்படுத்துவதற்கு சமஸ்கிருதமொழியை அளவுகோலாக எடுத்துக் கொள்வது வழக்கம். இதேபோன்று மறைமலையடிகள்.
கா.சு.பிள்ளை, வெள்ளைவாரணனார், இராசமாணிக்கனார், பாவாணர் போன்றவர்களும் சமஸ்கிருத்தையே எதிர்மறையான அளவுகோலாகக் கைக்கொண்டனர். தொல்காப்பியத்திலிருந்து பாரம்பரியமாகக் குறிப்பிடப்பட்டு வரும் ‘வடமொழி’ என்பதை இவர்கள் அனைவரும் சமஸ்கிருதம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்கள் சொல்லும் பொருளில் அச்சொல் தமிழ் நூல்களில் கையாளப்படவில்லை.
......................
வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகின்ற எண்வகை மெய்ப்பாடுகள் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் மொழி பெயர்ப்பே என்று கூறி நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய
பரதமுனிவரின் காலம் கி.பி.நான்காம் நூற்றாண்டென்பர். ஆகவே தொல்காப்பியத்தின் காலம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும் என்று வரையறுக்கிறார்.
................
தன்னுடைய ’வடமொழி நூல் வரலாறு’ என்ற நூலில் பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரான தமிழ்த் தொல்காப்பியத்தில் உள்ள மெய்ப்பாட்டியல் சூத்திரங்களில் பல நாட்டிய சாஸ்திரத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டனவாகத் தோன்றுகிறது. ஆதலின் நாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார்.
.............
ஐந்துவிதமான ஆராய்ச்சியாளர்கள் ஏழுவிதமான காலங்களைக் கூறிக்கொண்டிருக்கும் நாட்டிய சாஸ்திரத்தைத் தொகாப்பியத்தின் காலத்தைக் கணிக்க ஆதாரமாகக் கொள்வது சிறுபிள்ளை விளையாட்டா? ஆராய்ச்சியா?
..................
நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் நூல்கள் உருவான காலம் எது என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. நவாலியூர் நடராஜன் தன்னுடைய வடமொழி இலக்கிய வரலாறு என்ற நூலில்(ப.37) கிறித்து பிறப்பதற்கு முன்னர் சில நூற்றாண்டுகளாகவும் அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகளாகவும் வடமொழியில் சிறந்த இலக்கியங்கள் கிடைக்காத காரணத்தால் மாக்ஸ்முல்லரென்ற பேரறிஞர் இக்காலப் பகுதியில் இலக்கிய முயற்சியே நடைபெறவில்லையென்ற முடிவுக்கு வந்தார்.

அதனால் உலகியல் நூல்களாக காவியங்கள்கூடச் சமஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவையெல்லாம் பிராகிருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன என்றதொரு கொள்கையும் சில அறிஞர்களால் போற்றப்பட்டது. இதிகாசங்களும் அகத்துறைப் பாடலகளும் பஞ்சதந்திரம், பிருகத்கதை போன்ற கதைகளுங்கூட பிராகிருத மொழியிலிருந்தே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தெழுதப்பட்டன என்ற கருத்து உருவாயிற்று என்கிறார். இந்த கருத்தை உறுதிப்படுதுவதாக கிரிநகர்ப் பிரதேசத்தில் கி.பி. 150இல் உருத்திரதாமன் என்ற அரசனால் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் உள்ளது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள முதல் கல்வெட்டு இதுதான். இந்தக் கல்வெட்டு
தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட 89 கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
.......................
அன்று இந்தியாவில் வழங்கிய மொழிகள் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில நூற்றாண்டுகள் கழித்துத்தான் சமஸ்கிருத மொழி இந்த வரிசையில் இடம்
பெறுகிறது.
.............
அப்படியென்றால் பழந்தமிழ் நூல்களில் வடமொழி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம் என்று தான் பல அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
............
உண்மையில் இங்கு வடமொழி என்பது தனியே சமஸ்கிருதத்தை மட்டுமல்ல, அது பாலி போன்ற பாகத மொழிகளையும் உள்ளடக்கும் என்று கூறுவார் சிவத்தம்பி. (கார்த்திகேசு சிவத்தம்பி -தொல்காப்பியமும் கவிதையும், ப.3) இதே கருத்தை தெ.பொ.மீ யும் கொண்டிருந்தார்.
.....
கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கும் மாணவ, மாணவியர்க்கு (ஜைன மரபில் பெண்களும் கல்வி கற்றனர்) சமண மதம் சார்ந்த ஆசிரியர்கள் தமிழ் மொழியைக் கற்பித்து வந்தனர். அத்தகையப் பள்ளிக் கூடங்களில் தமிழ் மொழியிலுள்ள யாப்பு இலக்கணப் பகுதியைக் கற்பதற்கான பாடநூலாக ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற நூல்தான் இருந்தது. இன்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் யாப்பு கற்பதற்கு யாப்பருங்கலக்காரிகையைத்தான் பாடநூலாக வைத்துள்ளனர்.
......
இந்தக் குறிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களில் தமிழ் பயின்ற மாணவ மாணவியருக்கு அன்றைய நிலையில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் சிறப்புற்றிருந்த பாலி, பிராகிருத, சமஸ்கிருத நூல்களை
ஒப்பிட்டு சமண சமயத்தினர் கல்வி கற்பித்து வந்தனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது அக்காலத்து தமிழ்மொழிப் பயிற்சி என்பது தமிழ் மொழியை மட்டும் கற்பிப்பதாக இல்லை. மற்ற மொழிகளின் துணையுடந்தான் தமிழைச் செம்மையாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற கல்விச் சூழல் இருந்ததை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய சூழல் தமிழ்நாட்டில் இங்குக் குறிப்பிடப்படுகின்ற காலத்துக்கு முன்பே சமணர்களால் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்திருக்கிறது என்பதை அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாம்.
..............
“சமண சமயம் இன்று தமிழ்நாட்டில் குறுகி இருந்தாலும் ஒரு காலத்துத் தமிழ்நாடு முழுவதும் சீரும் சிறப்புமாகப் பரவியிருந்தது என்பதற்குக் கல்வெட்டுகளும் வயல் ஓரத்திலும் மூலை முடுக்குகளிலும் காட்சியளிக்கும் சமண விக்கிரகங்களும் அமணப்பாக்கம், அருகத்துறை, நமண சமுத்திரம், ஜினாலயம், பஞ்சபாண்டவ மலை, அமண்குடி, சமணர் திடல், சமணமலை, அருகன்மங்கலம், பஸ்திபுரம் முதலிய இடங்களில் பெயர்களும் ஜைன மடத்தின் பெயராகிய பள்ளி என முடியும் இடப்பெயர்களும் இன்று சான்று பகர்கின்றன(ப.4) தொடர்ந்து சமணர்கள் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகளையும் தெ.பொ.மீ. தருகின்றார். சம்பந்தர் முதலியோரால் சமணம் மறையவில்லை. தலைமை குன்றினாலும் சமணர் தமிழாராய்ச்சியும் சமணப் பிரசாரமும் செய்தே வந்தனர். சிந்தாமணி முதலிய நூல்களும் பின் தோன்றின.
..................
சமண சமயம் சார்ந்த தமிழர்கள் மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் போற்றத்தக்க நிலையில் வாழ்ந்து வந்ததைக் கல்வெட்டுகளின் மூலமாகத் தெ.பொ.மீ கூறியதைப் பார்த்தோம். இதே போன்று சமணர்கள் தமிழ்நாட்டில்
எழுத்துக்கள் உருவான தொடக்க காலத்திலிருந்தே தமிழர்களில் வாழ்க்கையுடனும் இலக்கியம், பண்பாடு மற்ற நுண்கலைகளுடனும் மிக நீண்ட காலம் உயிர்ப்புடன் விளங்கி வந்தனர் என்பதைப் பலசான்றுகள் காட்டுகின்றன.
..............
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி எழுதப்பட்ட 89 பிராமிக் கல்வெட்டுகள் பின்னர் கி.பி.5ஆம் நூற்றாண்டுக் காலங்களில் மாற்றமடைந்த 21 வட்டெழுத்துக் கல்வெட்டுகள் போன்றவைகளை எடுத்துக்காட்டிப் பழந்தமிழ் நாட்டில் சமண சமயம் சார்ந்த தமிழர்களால்தான் தமிழ்நாட்டின் எழுத்துக் கலாச்சாரமும் கல்வி கற்பித்தல் போன்றவையும் தொடங்கி நடத்தப்பட்டன என்று ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.  சமணர்களாகி விட்ட தமிழர்களின் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எழுத்தறியாதிருந்த தமிழ் மக்களுக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைத்தனர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கண யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்சி முதலான தமிழ்நாட்டுக் கலைகளெல்லாம் சமண சமயம் சார்ந்த தமிழ் மக்களால்தான் இயற்றப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளன.
............
இவைகளைத் தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, நீலகேசி, சேந்தன் திவாகரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நேமிநாதம், வீரசோழியம் (பெளத்தம்), நன்னூல் முதலான, சமணரால், இயற்றப்பட்ட நூல்கள் வரன் முறையாகக் காட்டுகின்றன. இந்த சீரான வரலாற்றைக் குலைப்பதற்காகவே 8.9ஆம் நூற்றாண்டுகளில் இறையனார் களவியல் எழுதப்பட்டதாக சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற சைவர்கள், வைணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவர்க்கு அல்லது வைணவர்க்கு உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும் திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார் போன்றோர் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும். இந்த பின்னணியிலேயே இறையனார் அகப்பொருள் உரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டுகொள்ளல் வேண்டும். ஐதீக (வைதீக) ஆக்கம் என்பது வரலாற்றினைத் தயாரிக்கும் ஒரு வகைமுறையாகும். இறையனாரகப்பொருள் உரையில் தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை தமிழை இந்துமயப்படுத்துவதற்கு ஆன முக்கியமாக, அதை சைவ மரபின் அங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியே ஆகும். இவ்வாறு நோக்கும்பொழுது தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ் வைதீகத்திற்கு உரிய இடம் பெருமுக்கியம் உடைய ஒன்றாகும்.
.................
வெளிப்படையாகச் சமண, பெளத்தச் சார்புடைய ஒரு நிறுவனத்தினை (சங்கத்தினை) எடுத்துக் கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம்.

இதேபோன்று இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியைக் கைப்பற்றிக் கொண்ட சைவ, வைணவ உயர்சாதித் தமிழர்கள் என்பவர்கள் தமிழ் மொழியிலுள்ள சமண, பெளத்த வரலாறுகள் தாங்கள் கைக்கொண்டு ஒழுகிவரும் இந்துக் கலாச்சாரத்துக்கும் சாதிய மேன்மைக்கும் முரணாக இருப்பதை விரும்பவில்லை. எனவே சமண சமயம் சார்ந்த வளையாபதி, குண்டலகேசி, தகடூர் யாத்திரை முதலான நூல்களை அச்சில் வரவிடாமல்
ஒழித்துக்கட்டினர். தங்களால் ஒழிக்க முடியாமல் நிலைபெற்றுவிட்ட நூல்களுக்குப் புதுவகையான வரலாற்றைப் படைப்பதில் ஈடுபட்டனர். புதுவரலாறு படைப்பதிலும் சிக்கல் தோன்றினால் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளை குழப்பிவிட்டனர். இப்படியான குழப்பத்தை அவர்கள் பல வழிகளில் நிறைவேற்றத் தொடங்கினர். மிக வெளிப்படையாகச் சமண நூல் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றை இது சைவ நூலாகவும் இருக்கலாம் சமண நூலாகவும் இருக்கலாம் என்று குழப்பிவிட்டனர். மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களை இவர்களாக் குழப்ப முடியவில்லை. எனவே இவற்றை மணநூல் என்றும் காமத்தைப் பேசுபவை என்றும் இலக்கியம் அல்ல; தத்துவத்தைப் பேசுபவை என்றும் புறந்தள்ளினர். இத்தைய மனிதர்களின் ஆதிக்கத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதிவரை தமிழ்மொழி சிறைப்பட்டிருந்தது.
........
வேறொருவகையான குழப்பத்தையும் தமிழ் வரலாற்றில் இவர்கள் உண்டு பண்ணினார்கள். இன்றைய நிலையில் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, தேவாரம், திருவாய்மொழி போன்ற தொகுப்பு நூல்கள் முன்னே குறிப்பிட்ட
சீரான சமண தமிழ் இலக்கிய வரலாற்றைக் குழப்பும் வகையில் உள்ளதாக இன்றைய தமிழ் மாணவர்களுக்குத் தென்படுகிறது. உண்மையில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எட்டாம்
நூற்றாண்டுக்குள் இந்து சமயம் சார்ந்த சைவர்களால் தொகுக்கப்பட்டதாகவே தெரிகிறது.
......
அதுமட்டுமல்லாது தொகுத்த சைவர்கள் வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட பாடல்கள் எவையென்பதும் எவ்வளவு என்பதும் நமக்குத் தெரியவில்லை. இதை வைத்துக் கொண்டு மிகப் பழைய காலத்திலிருந்தே சைவமும், வைணவமும் தமிழர்களிடம் நிலைபெற்றிருந்ததாக இவர்கள் வாதிடுகின்றனர். இந்தவாதம் இன்று ஒரு பொதுக்கருத்தாகவும்
மாறிவிட்டது.
......
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது தேவார திருவாய்மொழிப் பாடல்களில் மிகப் பழமையானவைகூட எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் பாடப்பட்டிருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. எனவே தமிழ் இலக்கிய,
இலக்கண வரலாற்றின் பழமையான ஆயிரத்து நூறு ஆண்டுகள் சமண பெளத்த சமயங்களின் கருத்துகளால்தான் வலுப்பெற்று வளர்ந்து வந்தன என்று நாம் குறிப்பிடலாம்.
.............
சைவ சமயம் சார்ந்த உயர்சாதித் தமிழர்கள்தான் தங்கள் அரசியல் லாபத்துக்காக இந்தச் சீரான வரலாற்று உண்மைகளைப் புரட்டியவர்கள் என்று நாம் கூறுவது தவறாக இருக்க முடியாது. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் வேறு எந்த மொழியிலும் ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்கள் (1100 ஆண்டுகள்) கி.மு.300 - கி.பி.800வரை தொடர்ச்சியாகத் தங்களுடைய இலக்கிய, இலக்கண, தத்துவ மரபுகளைப் பேணி வந்ததாக எந்தவிதமான தகவல்களும் இல்லை. சமணம் சார்ந்த தமிழ்மொழியின் உயிரோட்டமான இந்த வரலாற்று வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டுச் சாதியமும் வைதீகமும்
கலந்த புராணக் கற்பனைகளைத் தன்மேல் சுமத்திக் கொண்டது தமிழ்ச் சமூகம். இதன் விளைவாக இந்தியர்களுக்கு வரலாறே தெரியாது என்று மேனாட்டார் கூறிவந்த கருத்தை தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட அவல நிலை ஏற்பட்டது.

(இங்கு முழுக் கட்டுரையும் கொடுக்கப்படவில்லை. ஆசிரியரின் அனுமதியின்மையால் சிறு சிறு முக்கியக் குறிப்புகள் மட்டும் தரவுகளுக்காகத் தரப்படுகின்றன.)


இரா.பானுகுமார்,
சென்னை